இந்தியாவின் பசுமை மனிதர் திரு.அப்துல்கனி!

இந்தியாவின் பசுமை மனிதர் திரு.அப்துல்கனி!

அட்வென்சர் இதழின் செயல்பாட்டில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டு விளங்கிடும், மதுரை சீதாலெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தாளாளரான திருமதி பூர்ணிமா வெங்கடேஷ் அவர்களின் மேலான ஆலோசனையின்படி இந்தியாவின் பசுமை மனிதர் என அழைக்கப்படும் திரு.அப்துல்கனி அவர்களிடம் உரையாடினோம்.

இந்தியாவின் பசுமை மனிதர் என்ற பெருமைக்குரிய அடைமொழியுடன் கூடிய உங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

* இந்தியாவின் பசுமை மனிதர் என்று உங்களுக்கு பெயர் வருவதற்கான காரணம் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்?

நான் மிகுந்த இறைபக்தி உடையவன். என் படிப்பை முடித்தவுடன் சென்னையின் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மல்டிநேஷனல் வங்கியான ஸ்டாண்டர்டு சார்டர்ட் பாங்கில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தேன். இந்த வங்கியிலும் அதனைச் சுற்றி காணப்பட்ட இடங்களிலும் சேர்ந்து போயிருந்த குப்பைக் கூளங்களை நூதனமான முறையில் அகற்றவும் அதனை மறுசுழற்சிக்கு உட்படுத்தவும் நல்ல யோசனைகளைக் கூறி அதில் வெற்றியும் காணப்பட்டது. இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அடிப்படையிலேயே இறைவன் மேல் முழுநம்பிக்கையும், சக மனிதர்கள் யாவரும் சுகாதாரமாகவும் சுகத்தோடும் வாழ வேண்டும் என்கின்ற பரந்த எண்ணமும் கொண்டிருந்த படியினால், குப்பையைக்கூட வீணடிக்கக் கூடாது என்கின்ற உயர்ந்த எண்ணத்தை நான் கோட்பாடாகவே கொண்டிருந்தேன். இதன் காரணமாகவே ரீசைக்லிங் மெத்தடாலஜி என்று சொல்லப்படுகின்ற மறுசுழற்சி முறை என்பதை நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பேன். வங்கியில் நான் கொடுத்த குப்பைக்கான யோசனை மற்றும் வெற்றியைத் தொடர்ந்து என்னை ஊடகவியலாளர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டார்கள்.

சென்னையைப் பொறுத்தமட்டில், சென்னை மாவட்டத்தில் சேருகின்ற எல்லா குப்பைகளும் விளாச்சேரி மற்றும் கொடுஞ்சூர் ஆகிய இடங்களில் கொட்டப்பட்டு குப்பை மேடாகின்றன. ஆர்வத்தின் காரணமாக, இந்த குப்பை மேடுகளை நேரில் சென்று பார்வையிட எனக்கு விருப்பம் ஏற்பட்டது. நான் சென்றபோது அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுற்றி இருந்து கொண்டிருந்தார்கள். நாய்களும், பன்றிகளும், மாடுகளும் குப்பைக்கழிவுகளைச் சாப்பிடும் அதே நேரத்தில் மனிதர்களும் அங்கே சிந்தி சிதறியிருக்கின்ற உணவுப்பண்டங்களை தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். சிலர் தமக்கு கையிலே கிடைத்த உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டு சற்று தூரத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். ஒரு தாய் தனக்கு கிடைத்த சிறியதொரு உணவு பங்கை கையிலே எடுத்து குப்பையில் கிடைத்த சிறியதொரு தெர்மோகோலில் அதை வைத்து துணி ஏதும் அணியாத தன் குழந்தைக்கு ஊட்டி விடலானாள். இதைக்கண்ட எனக்கு உள்ளம் பதைத்தது. கோடிக்கணக்கான மக்கள் சுகபோகத்தில் வாழும் இந்த தமிழ்நாட்டில், தன்னுடைய குழந்தைக்கு உணவு தேட குப்பை மேட்டிற்கு வந்தாளே ஒரு தாய் என என் மனம் கலங்கியது. அப்போதே நான் முடிவு செய்து கொண்டேன், குப்பையை உரமாக்க வேண்டும், பசித்தோர்க்கு தனியாக உணவளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று. இந்தியாவின் பசுமை மிக்க வளத்தைக் கண்ட காரணத்தால்தான், வெள்ளையன் கூட விரைவில் நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. சுரண்ட முடிந்த அளவிற்கு சுரண்டி எல்லாவற்றையும் அழித்தப் பின்பே அவனும் வெளியே சென்றான். ஆனால் இப்போது உள்நாட்டு மக்களுக்கே உணவு பஞ்சம் வந்துவிட்டது. இது வறுமையினாலும் இருக்கலாம் மற்றவற்றாலும் இருக்கலாம்.

* பசுமை புரட்சிக்காக தாங் கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி சொல்லுங்களேன்

இப்போதுள்ள சூழ்நிலையில், நாம் வாழ்கின்ற இடத்தை வளமாக்கவும், சுவாசிக்கின்ற காற்றை சுத்தமாக்கவும் மரம் நடுதல் மிகமிக அவசியமாகும். உண்மையைச் சொல்லப்போனால் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு மரமாவது நட வேண்டும் என்பது தான் என்னுடைய பேரவா. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கோடி மரங்கள் நட வேண்டுமென்பதுதான் நமது முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்களின் கனவாக இருந்தது. அடுத்த சில ஆண்டுகளில், சுமார் 10 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டுவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாகவும் இருந்துவந்தது. நான் இதுவரையிலும் 40 லட்சம் மரங்கள் நடுவதற்கு காரணமாக இருந்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழக மக்கள் ஸ்பேஸ் பாங்க், டிரீ பாங்க் மற்றும் வாலண்டியர்ஸ் பாங்க் ஆகியவற்றை பயன்படுத்தி லட்சக்கணக்கான மரங்களை குறுகிய காலத்தில் நடவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும்.

* பசுமை புரட்சியில் உங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களின் பெயர்களை கூறுங்கள்

எனது தாயும் தந்தையும், எக்ஸ்னோரோ அமைப்பின் நிர்வாக இயக்குனரான திரு.எம்.பி.நிர்மல் அவர்கள், முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல்கலாம் மற்றும் அப்துல்கலாம் அவர்களின் அண்ணன் மகளான ஏ.பி. ஜே.நஜீமா மரைக்காயர் அவர்களும் மதுரையின் திருமதி. பூர்ணிமா ஜெயராமன் அவர்களும் எனக்கு ஊக்கமும் உதவியும் அளித்து வந்தார்கள்.

* தங்களின் குடும்பம் பற்றியும் தாங்கள் பெற்ற விருதுகள் பற்றியும் கூறுங்கள்

எனது தந்தை ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரி ஆவார். எனது தாய் குடும்பத் தலைவி கடந்த ஓராண்டிற்கு முன்புதான் எனக்குத் திருமணம் நடைபெற்றது. எனது மனைவி கேரளாவின் கள்ளிக்கோட்டையில் ஹோமியோபதி டாக்டராக இருந்து வருகிறார்.

2014-ம் ஆண்டு “நேஷனல் மெனுபாக்சரிங், ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் ஆர்கனைசேசன்” மூலமாக கிரீன் மேன் ஆப் இந்தியா என்ற விருது வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு அமைப்புகளின் மூலமாக ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகள் எனது சேவையினை பாராட்டி வழங்கப்பட்டது, எனத் தெரிவித்தார்.

இவரைத் தொடர்புகொண்டு பாராட்ட: 09941006786

Tags: News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top