மதுரையில் பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னோடியாய் விளங்கிய மூத்த மருத்துவர் சாம் சி. போஸ்!

மதுரையில் பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னோடியாய் விளங்கிய மூத்த மருத்துவர் சாம் சி. போஸ்!

இன்று தொழிற்நுட்பமும், அழகியல் துறையும் நம் கற்பனைக்கும் எட்டதாக ஒரு வளர்ச்சியை அடைந்து இன்னும் தம்மை மெருகேற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் தொடக்கம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பல முயற்சிகள் பல்வேறு போராட்டங்களை கடந்தே இந்நிலையை இப்போது எட்டியுள்ளோம்.

இன்று பிளாஸ்டிக் சர்ஜரியில் பலர் தலைசிறந்து இருப்பினும், மதுரையின் முதல் பிளாஸ்டிக் சர்ஜனாக தம்முடைய சேவையை அளித்து இன்று தம்முடைய முதுமையிலும் இளம் மருத்துவர்களை ஊக்குவிக்கிறார், மருத்துவர் சாம் சி போஸ் அவர்கள். அவர்களின் வாழ்க்கை பயணம் பற்றியும் இந்த சிகிச்சை பற்றியும் அறிந்துகொள்ள அவரிடம் உரையாடினோம்.

Reconstructive surgery-யை பயிலவேண்டுமென்கிற ஆர்வம் தங்களுக்கு ஏற்பட்டதின் காரணம்..

‘ஜனவரி மாதம் 1917ம் ஆண்டு, உலக யுத்தம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது.. எங்கும் பீரங்கி சப்தமும் குண்டு மழைகளும் பொழிந்து கொண்டிருந்த நேரம்..உலக யுத்தத்தில் இலட்சக்கணக்கான இளம் வீரர்கள் களமிறங்கி போரிட்டனர். ஒரு சிலர் உயிரையும், இன்னும் சிலர் உடல் பாகங்களையும் இழந்தனர். அப்போது வில்லியம் எம். ஸ்ப்ரெக்லி என்னும் பிரிட்டிஷ் வீரர் மூக்கில் குண்டு அடிபட்டு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். யார் அவருக்கு சிகிச்சையளிப்பது என்கிற ஒரு குழப்பம் மருத்துவர்களிடம் மூண்டது. அப்போது இவரை குணப்படுத்தும் பொறுப்பு நியூசிலாந்தைச் சார்ந்த காது மூக்கு தொண்டை நல மருத்துவர் ஹெரால்ட் கில்லிஸ் என்பவரின் மீது இறக்கி வைக்கப்பட்டது. அன்றைய காலத்தில் க்ளோரோஃபாம்மை முகத்தில் வைத்துதான் சிகிச்சையளிப்பதுண்டு, ஆனால் இவருக்கோ மூக்கு சேதமடைந்ததினால் புதுமையாக ஒரு ட்யூபை தொண்டைக்குள் இறக்கி, அதின் மூலம் க்ளோரோஃபாம் கொடுத்து மூக்கு சீரமைப்பைத் துவங்கினார் ஹெரால்ட். சுமார் மூன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப்பின் வில்லியம் முற்றிலுமாக குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.. இன்று பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாக திகழ்கிறார், ஹெரால்ட் வில்லியம்ஸ்.’ இந்த ஒரு சம்பவம் எனக்கு இந்த துறையின் மீது ஆர்வம் அதிகம் ஏற்படகாரணமாக இருந்தது. 1952ம் ஆண்டு மதுரை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பினை முடித்துவிட்டு, 1960-ல் நாக்பூரில் இந்த படிப்பில் இணைந்தேன். படிப்பினை முடித்து பணியின் நிமித்தம் மதுரைக்கு இடம் பெயர்ந்தேன்.

மதுரையில் பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி..

அன்று நான் மட்டுமே மதுரையில் பிளாஸ்டிக் சர்ஜனாக இருந்தேன். அப்போது Lt Col. பத்மநாப மேனன் என்னும் மருத்துவர் தான் அன்று மதுரை மருத்துவ கல்லூரியின் டீனாக இருந்தார். அவரிடமும் நான் படிந்திருக்கிறேன். அப்போது அவர் என்னைப் பார்த்து: ’பிளாஸ்டிக் சர்ஜரி ஆரம்பிக்க போறீயா?’’ஆமாம் சார்’ ’எங்க தொடங்குவாய்?’ ‘நீங்க தான் ஒரு இடம் தரணும்' ‘சரி என் கூட வா!’ என்று என்னை அழைத்துக் கொண்டு போய் 26ம் தேதி ஜனவரி மாதம் 1964 காலை 11 மணி, தொடங்கிடு.’ என்று 12 படுக்கை கொண்ட அறையை என்னிடம் அளித்துவிட்டு சென்றுவிட்டார். அதன்பின் 1978-ம் ஆண்டு எம்.சிஎச் என்கிற ஒரு துறையைத் துவங்கி இன்றுவரை அத்துறையுடன் இணைப்பிலேயே இருக்கிறேன்.

இன்று மருத்துவத்துறையில் உங்களின் பங்களிப்பு..

சனிக்கிழமைதோறும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதுகலை பிளாஸ்டிக் சர்ஜரி பயிலும் மருத்துவ மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இருக்கும். அதில் அவர்கள் இரண்டு case-சை எங்களின் முன்னிலையில் சமர்பிப்பார்கள். அதற்கு நான் தலைவராக இருக்கிறேன் இதில் மாணவர்களின் நிறைகுறைகளை சுட்டிக் காட்டுவதுண்டு.

நீங்கள் பெற்ற விருதுகள் பற்றி..

இதுவரை பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறேன். அதில் மறக்க முடியாத விருது என்றால் அது, 2011ம் ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து பிளாஸ்டிக் சர்ஜன்களும் இணைந்து ‘Plastic surgeon of the year‘ என என்னை தேர்வு செய்து கௌரவித்தனர்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top