எந்திரப் பறவைகள் இல்லம்!

எந்திரப் பறவைகள் இல்லம்!

உலக நாடுகளிடையே வர்த்தகம், கல்வி, சுற்றுலா என பல துறைகளிலும் தென்தமிழக மக்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது மதுரை விமான நிலையம். 1942-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பன்னாட்டு விமான நிலையமாக படிப்படியாக உயர்ந்துவரும் மதுரை விமான நிலையத்தின் சீரான செயல்பாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் விமான நிலைய இயக்குனர் திரு.வி.வி.ராவ் அவர்களின் அது ஒரு காலம்... வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சிறுசுகளும், பெரிசுகளும், வானத்தில் இருந்து வரும் அந்த சத்தத்தைக் கேட்டு, சாப்பிட்ட கையுடன் வெளியே வந்து, அண்ணாந்து பார்ப்பார்கள். சத்தம் வரும் திசையில் தேடுவார்கள். உடனே ஒரு பொடியன், ‘டேய். அங்கே பார்ரா... ஏரோபிளான்... என்ற கையை நீட்டி குதூகலமாகக் கூச்சலிடுவான். அவன் கை காட்டிய திசையில் எல்லோரும் அண்ணாந்து, வாய்பிளக்க வேடிக்கை பார்ப்பார்கள். ஒரு சிறிய பறவையைப் போல, வானில் சீராகப் பறக்கும் விமானத்தைப் பார்த்தார்கள், கிராம மக்கள்.

இன்று.....
‘பிளேனும் பஸ் மாதிரிதான் இருக்கு. என்ன இது ரோட்டிலே பறக்குது, அது வானத்திலே பறக்குது! அம்புட்டு தான்...’ என்று சொல்லும் அளவிற்கு சாதாரணமாகப் போய் விட்டது அந்த விமானம் என்ற எந்திரப் பறவை!

மதுரையிலேயிருந்து ரிசர்வ் பண்ணி, காத்திருந்து ஏ.சி. கிளாஸ் ரெயிலில் போகும் பணத்திற்கு, கொஞ்சம் கூடப் போனால், விமானத்திலேயே மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு மணிநேரத்தில் சென்று விடலாம். காலம் எவ்வளவு மாறி விட்டது?

காலத்தை மிச்சப்படுத்தவும், சாமானியர்களும், எளிதில் பயணிக்கக்கூடிய வகையில்தான் இன்று விமானங்கள் ரகம் வாரியாக வந்துவிட்டன. மதுரையில் இருந்து இந்தியாவிற்குள் மட்டும்தான் செல்ல முடியும் என்ற நிலைமை இப்போது இல்லை! துபாய், இலங்கை போன்ற வெளிநாட்டிற்கு மான விமான சேவையும் மதுரையில் வந்துவிட்டது. இதனால் வேலை, தொழில், சுற்றுலா என்று இதன் இலக்கு இறக்கைகள் விரிந்து பரந்திருக்கிறது.

கோயில் நகரம்... மதுரை, பெரிய கிராமம் தான்... மதுரை... என்ற இரு வேறுபட்ட மதிப்பீட்டிற்கும் இடையே உள்ள மதுரையின் விமான நிலையத்தை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம். புராணத்தில், ராவணன் சீதையைத் தனது புஷ்பக விமானத்தில்தான் கொண்டு வந்தான் என்று படித்துள்ளோம். அவன் விமான நிலையம் இருந்த இடம் என்று இலங்கையில் ‘வாரியப்பொல’ என்ற கிராமத்தையும் அடையாளப்படுத்தியுள்ளார்கள் அந்த இலங்கைக்கே இங்கிருந்து விமானமா... என்ற அறிவியல் ஆச்சர்யத்துடன் மதுரை விமான நிலைய அதிகாரி திரு.வி.வெங்கடேஸ்வரராவைச் சந்தித்தோம். நமது ஆர்வத்தில் பங்கேற்ற அவரும் உற்சாகமாகப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். எண்ணற்ற அரிய தகவல்களை அவர் மூலம் அறிய முடிந்தது...!

1942-ல் தான் மதுரை விமான நிலையம் துவங்கப்பட்டது. ‘ஃபாக்கர்’, ‘ஃபிரெண்ட்ஷிப்’ என்ற இரண்டு என்ஜின்கள் பொருத்தப்பட்டு, 28 பயணிகள் வரை மட்டுமே பயணிக்கும் சிறிய விமானம்தான் துவக்க காலத்தில் சில ஆண்டுகள், ஒரு தனிப்பட்ட பத்திரிகை நிறுவனம் தங்களது பிரதிகளை, மதுரை - சென்னை - மதுரை என்ற இருவழிப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தியது. காலப்போக்கில்தான், பயணிகள் விமானம் பயன்பாட்டிற்கு வந்தது.

மதுரைக்கு வந்திறங்கும் விமானம் திருப்பரங்குன்றம் மலையை ஒட்டித்தான் வட்டமடித்து தரையிறங்கும். இரவு நேரங்களில் மலையின் மீது மோதி விடக்கூடாது என்பதற்காகத் தான் திருப்பரங்குன்றம் மலையின் மீது பெரிய சிகப்பு விளக்கு பொருத்தப்பட்டு, அது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. 2010-ஆம் ஆண்டில் புதிய, நவீன கட்டமைப்புகள் உருவாக்கப்பட்ட மதுரையிலிருந்து சென்னை, திருச்சி, கோவை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி போன்ற நகரங்களுக்கு, உள்நாட்டு சேவை தினசரி உள்ளது. ஏர் இந்தியா, ஏர் கார்னிவால், ஜெட் ஏர்வேஸ், ஸ்பைஸ் ஜெட், ஏர் பெகாசஸ் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

2012-ஆம் ஆண்டிலிருந்துதான் வெளிநாட்டு விமான சேவையும் தொடர்ந்தது. தற்போது துபாய் மற்றும் இலங்கைக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு 17 விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த எண்ணிக்கை அதிகரிக்க விமான நிலையத்தின் ஓடுபாதையை அகலப்படுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பின்னாளில் 300-க்கும் மேல் இருக்கைகள் கொண்ட பெரிய விமானம் இயக்கப்படுவதற்கும் இது ஏதுவாக இருக்கும்.

‘குறை இல்லாத துறை இல்லை’. மதுரையிலிருந்து செல்லும் பயணிகளின் பொருட்களை சோதனை செய்ய, சுங்க இலாகா எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகம் என்பதால், பலர் மதுரையைத் தவிர்த்து, திருச்சியிலிருந்து பயணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தபோது, புன்முறுவலுடன் அதை ஆமோதித்தார். இதற்கான வேண்டுகோளை, சுங்க இலாகாவிடம் எடுத்து உரைத்துள்ளோம். விரைவில் இக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

ஒரு பயணி வெளிநாட்டிற்கு கொண்டு செல்லும் பொருட்களின் எடை, மதிப்பு போன்றவற்றையும் சுங்க இலாகவே தீர்மானிக்கிறது. இது சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். வெளிநாட்டிலிருந்து கொண்டு வரும் பொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும். நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும், நம்முடன் அழைத்துச் செல்லலாம். இதற்கு தனிக்கட்டணம் உண்டு. இதற்கான விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கும், வயது முதிந்தோர்களுக்கும் வேண்டிய வசதிகள் செய்யப்படுகின்றன.

வெங்கடேஸ்வர ராவ் பகிர்ந்து கொண்டவை அனைத்தும், பயனுள்ளதாகவே இருந்ததில் திருப்தி! இந்த வேலைக்கான விசேஷ தேர்வில் வெற்றி பெற்று தனது அனுபவத்தை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்ததில் அவருக்கும் திருப்தி! நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்!

தொடர்புக்கு:
0452-2690717

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top