திருப்பரங்குன்றமும் வயிராவிக்குட்டியும்!
Posted on 19/12/2016

திருப்பரங்குன்றம்..... இந்த சொல்லுக்குள்ளே ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் சரித்திரமும், இதற்கு மேற்பட்ட புராண இதிகாச வரலாறும் இன்றும் இதன் பெருமையும், ஆன்மீக பலமும் உலகப்பிரசித்தி பெற்றது.
தமிழ்க் கடவுளான முருகனின் முதற்படை வீடு என்ற அற்புதமான ஆலய அடையாளச் சிறப்பைப் பெற்றது. திருப்பரங்குன்றம் என்று சொன்னாலே, அதிக நீளம் உடைய கோபுரமும், அதற்கு மகுடம் வைத்தாற்போல் தெரியும் அந்தக் கோயில் கோபுரமும் தான் சட்டென நம் எல்லோரது நினைவிற்கும் வரும். இந்தக் கோயிலுக்குச் செல்பவர்கள், கோயிலுக்குள் நுழையும் முன்பாக அந்தக் கோபுரத்தைக் கண்டு கும்பிட்டு விட்டும், கன்னத்தில் போட்டுக் கொண்டும் செல்வது வழக்கமாக நாம் காணும் அன்றாட ஆன்மீக நிகழ்வுதான்.
ஆனால் இந்தக் கோபுரத்தின் பின்னனியில் இருக்கும் அசாதரணமான, திடுக்கிட வைக்கும் சரித்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஏன் இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்குகூட அந்த திகில் வரலாறு தெரியுமா என்பது சந்தேகமே!
மதுரையை ஆண்ட பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் என்ற பாண்டிய மன்னனின் படைத்தளபதியான சாத்தன் கணபதி என்பவரால் கி.பி. 773-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குடவரைக் கோயில் பாண்டிய மன்னர்களாலும், பின்னாளில் வந்த நாயக்க மன்னர்களாலும் விரிவாக்கம் செய்யப்பட்டு பல திருப்பணிகளும் செய்யப்பட்டன. உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் இந்தக் கோயிலுக்கு அதிகம் வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில், பின்னாளில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த ஆலயத்தின் மேன்மையினை உணராத ஆங்கிலேயர்கள் இந்த ஆலயத்தை தங்களது படைவீரர்களின் மருத்துவமனையாக உருமாற்றினார்கள்.
வெகுகாலம் பூஜைகளே இல்லாமலும், ஆன்மீகத்தின் அடையாளங்களும் வெள்ளையர்களால் தொலைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்டு வேதனை அடைந்த மக்கள், எப்படியும் இந்தக் கோயிலை அந்நியரின் பிடியிலிருந்து மீட்டு மீண்டும் கோயில் மக்களின் பயன்பாட்டுக்கு வர வேண்டும் எனப் பிரயாசைப்பட்டனர். அதற்காக ஒரு திட்டத்தையும் தீட்டினர்.
ஆங்கிலேயர்களுக்கு சில சம்பிரதாய போக்குகள் உள்ளது. தாங்கள் ஒரு இடத்திற்கோ, ஊருக்கோ பிரயாணம் செய்யும் போது, அவர்கள் எதிரே விபத்து நடந்து யாருக்கேனும் இரத்தக்காயம் அடைந்து, அதனைப் பார்க்க நேர்ந்தால் அதனை அபசகுணமாகக் கருதி தாங்கள் மேற்கொண்ட பயணத்தையும் ரத்து செய்து விடுவார்கள். இதனை அறிந்த மக்கள் ஒரு கூட்டம் அமைத்து, அதில் ‘வயிராவிக்குட்டி’ என்பரைத் தேர்ந்தெடுத்து வைத்தனர். அவர்களின் திட்டப்படி வயிராவிக்குட்டி யாருக்கும் தெரியாமல் திருப்பரங்குன்றக் கோயிலின் கோபுரத்தில் ஏறி மறைந்து நின்று கொண்டார். எதிரே பதினாறுகால் மண்டபத்தினைத்தாண்டி சாரட் வண்டியில் ஆங்கிலேய உயர் அதிகாரி வந்து கொண்டிருந்தார். அவரது சாரட் குதிரை வண்டி கோயிலை நெருங்கியதும், திட்டப்படி வயிராவிக்குட்டி கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்தார். அவரது உடல் ஆங்கிலேய அதிகாரியின் முன்பாக சிதறி விழுந்து ரத்தம் சிதறிச் சடலமானது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஆங்கிலேய அதிகாரி. அதே சமயம், மறைந்திருந்த மக்கள் பெருந்திரளாக வந்து ஆங்கிலேயரை எதிர்த்துக் கோஷங்களை எழுப்பினர். இதனை அபசகுணமாக எண்ணி ஆங்கிலேயர்களும், அந்தக் கோயிலை விட்டு தங்கள் சிப்பாய்களை வெளியேறச் செய்து, கூடாரத்தையும் காலி செய்தனர்.
திருப்பரங்குன்றம் கோயிலுக்காக உயிர்த்தியாகம் செய்த வயிராவிக்குட்டியின் தியாகத்திற்கு தலை வணங்கிய மக்கள் அவர் சிந்திய ரத்தத்திற்கு காணிக்கையாக நிலம் கொடுத்தனர். அது மட்டுமல்ல. அவரைத் தொடர்ந்து அவரது ஆண் வாரிசுகளுக்கு மானியங்களை வழங்கினார்கள். இந்த நடைமுறை இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போதும் கோயிலின் பெட்டகச்சாவியின் ஒரு பகுதி வயிராவிக்குட்டியின் வாரிசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவருக்கென தனியாக ஒரு வாளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது அவரது வாரிசுகளும் வயிராவிக்குட்டி என்றே அழைக்கப்படுகின்றனர். கோயில் திருவிழா சமயங்களில் உற்சவர் ஊர்வலமாக வரும் போது வயிராவிக்குட்டிதான் தனது வாளினை ஏந்தி முன்பாகச் செல்வார். உற்சவர் சிலைக்கு ஏதேனும் ஆபத்து வராமல் தடுக்கவே வயிராவிக்குட்டி முன்பாக பாதுகாப்பிற்காகச் செல்கிறார். இப்படிப்பட்ட தியாக வரலாற்றுப் பின்னனி திருப்பரங்குன்றத்தின் புகழுக்கு மகுடம் சூட்டுகிறது.
க.ராஜா,
வரலாற்று ஆய்வாளர்
Tags: News, Madurai News