தீபாவளியா..? அப்படின்னா...!

தீபாவளியா..?  அப்படின்னா...!

நாடெங்கும் தீபாவளிக்காக பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருக்க, இன்றும் நம் நாட்டின் சில பகுதிகளில் தீபாவளியையே வருடக்கணக்கில் புறக்கணித்து வருகின்றனர். அதனை ஒரு வேண்டாத விழாவாகவே கருதி, ஏன் இந்த தீபாவளி பண்டிகை? என்று வெறுக்கிறார்கள். வெறும் புரட்சிக்காகவோ, மற்றவர்களிடமிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காகவோ, வேண்டுமென்றே அவர்கள் இதனைச் செய்வதில்லை. அதற்கான காரணகாரியங்களை ஆராயும் போது, அந்தப் புறக்கணிப்பின் அர்த்தமுள்ள பின்னனி இருக்கிறது. சூழ்நிலை, வாழ்வியலில் ஏற்படும் தடுமாற்றங்கள், பிற உயிரினங்களின் மேல் வைத்த பாச உணர்வு எல்லாம் இதற்கான காரணிகளாக இருக்கின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி எனும் ஊரில் நம்நாடு உட்பட, அயல்நாட்டுப் பறவைகள் எல்லாம் தஞ்சம் புகுந்துள்ளன. இந்த ஊரின் குளக்கரையினைச் சுற்றியுள்ள மரங்களில் பல வகையான பறவைகள் கூட்டம் கூட்டமாய் வாழ்கின்றன. அவைகளுக்கு மனநிறைவையும், வாழ்க்கையையும் தருவதில் அமைதியான சூழ்நிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. நாம் அருகில் நின்று குறுகுறுவெனப் பார்க்கும் போது, அந்தப் பார்வைகூட அவைகளுக்கு சொல்ல முடியாத அச்சத்தைத் தருகிறது. பாதுகாப்பு உணர்வு அப்போது அவைகளுக்கு மேலோங்கி இருக்கிறது. எங்கே தங்களை வேட்டையாடி விடுவார்களோ இந்த மனிதர்கள், என்று அஞ்சிய குணத்தில் வாழும் இயல்புடையவை இந்தப்பறவை இனங்கள். இதனை இங்கு வசித்துவரும் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கின்றனர். எனவேதான், தீபாவளி சமயங்களில் ஏற்படும் பலவிதமான வெடிச்சத் தங்கள், இந்தப் பறவைகளைக் கலவரப்படுத்தும், என்று உணர்ந்த இப்பகுதி மக்கள் இந்தப் பறவைகள் வசிக்கும் இடங்களைச் சுற்றி தீபாவளி அன்று வேட்டு வெடிப்பதை அடியோடு விட்டுவிட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, தங்கள் வாழ்க்கைக்கே இந்த தீபாவளி சோதனையாக வருகிறது என்று வெறுக்கும் ஊர்களும் இருக்கத்தான் செய்கின்றன. கடந்த 56 ஆண்டுகளுக்கும் மேலாக 12 ஊர்கள் தீபாவளியை ஒன்றுகூடிப் புறக்கணித்து வருகின்றன. இன்றைய தலைமுறையினர் தீபாவளி என்றால் என்னவென்று நேரடியாகத் தெரியாத வகையில்தான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திரப்பட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையப்பட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி, இந்திராநகர் போன்ற ஊர்களைச் சேர்ந்த மக்கள்தான் ஒட்டு மொத்தமாக முடிவெடுத்துத் தீபாவளிப் பண்டிகையைக் கைகழுவி உள்ளனர். இங்கு வாழும் மக்கள் எல்லாம் விவசாயத்தை மட்டுமே பிரதானத் தொழிலாக நம்பி வாழ்பவர்கள். புரட்டாசி தமிழ் மாதத்திலே நிலத்தை உழுது பயிர் செய்து ஐப்பசியில் வரும் மழையை நம்பி விதை விதைப்பவர்கள். இதற்காக இவர்கள் மிகுந்த சிரமப் பிரயாசையுடன் தான் விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. தை மாதம் வரும் அறுவடையை நம்பி, வட்டிக்குப் பணம் வாங்கி, விவசாயம் செய்யும் இவர்களுக்கு, ஐப்பசியில் வரும் தீபாவளிப் பண்டிகை கூடுதல் செலவாகி விடுகிறது. இதனால் இவர்களது கடன் சுமையும் அதிகரிக்கிறது. அதனால் விவசாயத்தையும் சரியாகக் கவனிக்க முடியாமல், குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகளையும் மனதார நிறைவேற்ற இயலாமல் கடன்சுமையுடன், மனச்சுமைக்கும் ஆளாகிறார்கள்.

ஊரில் வசதி படைத்தவர்கள் வீட்டில் தீபாவளியை நன்கு கொண்டாடலாம். ஆனால் அதே சமயம், பெரும்பான்மையான ஏழைக்குடும்பங்கள் என்ன செய்யும்? ஏழைப்பிள்ளைகள் வசதியானவர்களைப் பார்த்து ஏக்கம் கொண்டால் என்ன செய்வது? என்று எதார்த்தமாக யோசித்த பெரியோர்கள் இந்தப் பன்னிரெண்டு கிராமங்களில் இனி தீபாவளியே கொண்டாடுவதில்லை என ஒருமனதாகத் தீர்மானித்து இன்றுவரை அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஆனால், அறுவடையான தை மாதத்தில் வரும் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்று தீபாவளியையும், பொங்கல் பண்டிகையையும் ஒரு சேரக்கொண்டாடி விடுகிறார்கள். தீபாவளியைப் புறக்கணிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள், வேலை மற்றும் தொழில் சார்ந்த வெளியூரில் இருந்தாலும், இந்தக் கட்டுப்பாட்டை மீறாமல் இருக்கிறார்கள். இந்த ஊரில் பெண் எடுத்து திருமணம் செய்தவர்களை தீபாவளி விருந்துக்கு அழைப்பதேயில்லை! வெளியூரில் பெண் எடுத்து திருமணம் செய்த இந்த ஊர் ஆண்களும், தீபாவளி விருந்துக்கு மனைவியின் பிறந்த வீட்டிற்குச் செல்வதில்லை. நியாயமான இந்த ஊர்க்கட்டுப்பாடு ஊர் ஒற்றுமையைக் காட்டி, அடிப்படையான விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று!

தீபாவளி அன்று மனதை நெருடும் சில நிகழ்வுகளையும் நாம் கண்கூடாகப் பார்க்க நேரிடுகிறது. இல்லாமையின் விலாசங்கள் அன்று வீதிவீதியாகச் சென்று கொண்டிருக்கின்றன. தீபாவளி நாளில் ஒரு பரிதாபகரமான காட்சி! எல்லோரும் பார்ப்பதுதான். ஆனால் அன்றைய பண்டிகை கொண்டாட்டத்தில் எளிதில் மறந்து போகக்கூடிய காட்சி அது! கிழிந்த டவுசர், சட்டையுடன் தெருவெங்கும் சுற்றித்திரியும், கனவுகளை மட்டுமே மனதில் சுமந்த ஏழைச்சிறுவர்கள், வெடிக்காமல் விட்டுப் போன பல பட்டாசுகளைத் தேடுவதுதான் அது.

Tags: News, Madurai News, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top