'சேவை செய்வதே ஆனந்தம்'! - திரு. ராமகிருஷ்ணன்

\'சேவை செய்வதே ஆனந்தம்\'! - திரு. ராமகிருஷ்ணன்

பசியென்று வருபவர்களுக்கு உணவளிப்பதைவிட மிகப்பெரிய விஷயம் ஏதுமே இல்லை. மனிதனுக்கு தன்னுடைய வாழ்வில் பல தேவைகள் இருக்கின்ற போதிலும் உணவு என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது. ஒரு மனிதனுக்கு சரியான நேரத்தில் சரியான உணவு கிடைத்தால் அவன் வாழ்வில் எல்லாவற்றையும் அடைந்துவிடுவான். உலகளவில் மக்களின் பசியைப் போக்க அந்தந்த நாட்டின் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளைக் கையாண்டு வருகிறது. அவர்களோடு இணைந்து பல தொண்டு நிறுவனங்களும் கைகோர்த்து பசியில்லா ஓர் உலகைப் படைக்க களத்தில் முழு ஈடுபாட்டுடன் சிறப்பான முறையில் செயல்படுகிறது.

மதுரையில் சமீபத்தில் துவங்கப்பட்ட 'பசி இல்லா மதுரை' என்னும் மதுரை மக்களின் பசியைப் போக்கும் திட்டமானது முதற்கட்டமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் துவங்கப்பட்டு ஏழை எளிய நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கு மதிய உணவு அன்றாடம் வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மற்றும் பலகரங்கள் என்னும் தொண்டு நிறுவனமும் ஒருசேர இணைந்து நடத்தி வருகிறது. இந்த சேவையில் அன்றாடம் உணவளிக்கும் ஒரு சேவையை அமைதியான முறையில் ஆற்றிவருகிறார் மதுரை ஸ்ரீ மீனாட்சி கேட்டரர்ஸின் உரிமையாளர் திரு. ராமகிருஷ்ணன் அவர்கள். இச்சேவையில் தமது பங்களிப்பைப் பற்றி வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத இவரை சந்தித்து பேசினோம்.

'நாங்கள் செய்யும் இந்த கேட்டரிங் தொழிலே மக்களுக்கு செய்யும் ஒரு சேவையே. நாம் இந்த உலகில் உயிருடன் வாழ்வதற்கு நமக்கு அத்தியாவசியமாக திகழ்வது உணவு மட்டுமே. அது ஒரு மனிதனுக்கு கிடைக்காத போது தான் அவன் வாழ்க்கையில் தொய்வுகளும், தோல்விகளும் ஏற்படுகிறது.

இந்த கேட்டரிங் தொழில் துவங்கி இவ்வாண்டோடு ஒன்பது ஆண்டுகளான போதிலும் பசியுடன் வரும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்கிற எண்ணம் என்னில் இருந்துக் கொண்டே வருகிறது. இதனாலேயே சேவை சார்ந்த இரத்த தான முகாம்களோ, எழை எளியவர்களுக்கு மருத்துவ முகாம்கள் போன்றவை நடைபெறும் போதெல்லாம் இலவசமாக உணவளிப்பதுண்டு. அப்போது தான் 'பசி இல்லா மதுரை'-யின் திட்டத்தோடு பலகரங்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் என்னை சந்தித்தனர். ஏழைகளுக்கு உணவளிப்பதை விட மிகப்பெரிய மனநிறைவு வேறு எதிலும் கிடைப்பதில்லை. எனவே உடனே ஒப்புக்கொண்டேன்.' என மனநிறைவுடன் கூறினார்.

இதைப்பற்றி பலகரங்களின் நிர்வாக இயக்குநர் திருமதி. அலிமா பானு சிக்கந்தரிடம் கேட்டபொழுது: 'இந்த திட்டத்தின்படி வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒரு ஹோட்டல் உரிமையாளர் உணவை வழங்கும்படியாக திட்டத்தைக் கொண்டிருந்தோம். அதன்படி ஒருவர் ஒரு வருடத்தில் 12 முறை செய்யும்படி இருந்தது. ஆனால் பசி இல்லா மதுரையின் திட்டத்தை முழுவதுமாக கேட்டரிந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் தாமகவே முன்வந்து ஒரு ஆண்டிற்கான முழுபொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என தற்போது அன்றாடம் 350 முதல் 450 பேருக்கு இலவசமாக மதிய உணவுகளை வழங்கி வருகிறார். அவர்களின் இந்த உன்னதமான சேவைக்கு வாழ்த்துதலை வார்த்தைகளினால் சொல்லி மாலாது.' என கூறினார்.

உணவு அளிப்பதைத் தொடர்ந்து தற்போது காட்டுப்பிள்ளையார் கோவில் பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை ஏற்படுத்தியுள்ள இவர், ஏழை எளியவர்களுக்கு திருமண வைபவங்களுக்கு இலவசமாக இடமளித்தும் வருகிறார். இச்சேவையை சிறப்பாக செய்து வரும் இவரை வாழ்த்த 9345213345 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags: News, Madurai News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top