நீரின்றி அமையாது உலகு - M. அபுல் கலாம் ஆசாத்!

நீரின்றி அமையாது உலகு - M. அபுல் கலாம் ஆசாத்!

மூன்றாவது உலகப்போர் நடக்கக்கூடியதாக இருந்தால், நாடுகளுக்கிடையே நடக்கும் அந்தப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பதுதான் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.

நாளுக்குநாள் பெருகிவரும் மக்கள் தொகையும், அதற்கேற்ப நீரின் தேவையும் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது. பெருகிவரும் தொழிற்சாலைகளின் பெருக்கம், அது வெளியேற்றும் மாசுகளினால் ஏற்படும் தட்பவெப்பநிலை மாற்றம் ஆகியவற்றால் குறிப்பிட்ட காலங்களில் பெய்யும் பருவமழையும் தவறிப்போய் வருகிறது. அவ்வப்போது ஏற்படும் புயலால்தான் மழை பெய்து கொண்டிருக்கிறது என்ற சூழ்நிலை வந்துவிட்டது. ஆனால், ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், உலகம் தோன்றியபோது இருந்த நீரின் அளவு குறையவே இல்லை என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.

பிறகு ஏன் மூன்றாவது உலகப்போர் மூழுமளவிற்கு தண்ணீரின் பிரச்சனை பேசப்படுகிறது. தண்ணீர் இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் பிரதான இடத்தை வகிக்கிறது. இதை அனைத்து சமய நூல்களும் சொல்கின்றன. உலகத்தில் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாதது என்பதைத்தான் வள்ளுவர், நீரின்றி அமையாது உலகு என்று திருக்குறளில் இயம்பியிருக்கிறார்.

வீண் விரயமாக செலவழிக்கப்படும் ஒவ்வொரு துளி நீருக்கும் மறுமை நாளில் நாம் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தண்ணீரின் பயன் பற்றி வேதநூல்களிலிருந்து, பல சமயச்சான்றோர்கள், ஆராய்ச்சியாளர்கள் வரை தண்ணீரின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொண்டு இருக்கின்ற போதிலும் நாம் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. விளைவு இன்று நிலத்தடி நீர் குறைந்து, மாசுபட்டு, பருவமழை பொய்த்து தண்ணீருக்காக தவித்துக் கொண்டிருக்கிறோம்.

மனிதனின் மொத்த உடல் எடையில் 60 சதவிகிதம் நீர்த்தன்மை கொண்டது. அதனால்தான், மனித உடலிலிருந்து இரத்தம் வெளியேறும்போது பெரும் களைப்பு ஏற்பட்டு, அந்த உடல் நீரைத் தேடுகிறது. அந்நேரத்தில் கிடைக்கும் தண்ணீர் அந்த தாகத்தை தீர்ப்பதோடு மட்டுமல்லாமல், உயிரைத் தக்கவைத்துக்கொள்ளும் மாமருந்து தண்ணீர் மட்டும்தான் என்று மூளையிடம் உணர்த்துகிறது. அந்நேரத்தில் பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதத்தையே தந்தாலும், அந்த தாகத்தை தீர்த்துவிட முடியாது. அதனால்தான், பஞ்ச பூதங்கள் என்ற ஐந்தில் நீர் முக்கிய அங்கம் வகிக்கிறது.

நிலத்தடி நீரை பாதுகாப்பதும், அதற்கு ஆதாரமான மரங்களை வளர்ப்பதும் எவ்வளவு இன்றியமையாதது என்பதைப் பெரும்பாலான மக்கள் உணரவில்லை என்பது வெற்று வாதம். எல்லோரும் அதை உணர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்று நேற்று அல்ல, தண்ணீரின் தேவையை பல ஆண்டு காலமாகப் பல அறிஞர்களும், மேதைகளும் பல வழிகளில் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் நாம் ஒருவர் செய்தால் மட்டும், இந்த பிரச்சனை தீர்ந்துவிடுமா? என்ற எதிர்மறை சிந்தனைந்தான், தண்ணீரைப் பாதுகாக்க முடியாமல், முக்கியத்துவம் தராமல் தடுக்கிறது.

தண்ணீருக்காக, நாம் ஒவ்வொரு நாளும் பணத்தைச் செலவழித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இருந்தாலும் தண்ணீரின் அவசியத்தையோ, அதைப் பாதுகாக்கும் வழிமுறையைக் கடைப்பிடிப்பது பற்றியோ நாம் கவலைப்படுவதில்லை.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். அதை மாசுபடாமல் காக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வர வேண்டும். செயற்கை உரங்கள் மற்றும் கழிவு நீர் பெருமளவு பூமியில் கலப்பதனால்தான் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு இயற்கையாக தண்ணீரில் கிடைக்கும் சத்துக்களும் கிடைக்காமல் போய்விடுகிறது. மேலும், பூமிக்குள் தண்ணீர் செல்ல முடியாதவாறு அமைக்கப்படும் கான்கீரிட் சாலைகள், மழைநீர் சேகரிப்புத்திட்டத்தை முறையாக அமைக்காத பெரிய வணிக வளாகங்கள் மற்றும் வீடுகள் இவற்றால் தண்ணீரை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம்.

நாம் உடனே தீவிர நடவடிக்கைகளில் இறங்காவிட்டால், பின்வரும் சந்ததியினர் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்பது இரண்டாம்பட்சம் தான், நாமே பெரும் துன்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். ஒவ்வொரு வீடும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாக அமைத்துக் கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு வழியில் கழிவுநீர் கலக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரின் அவசியத்தையும், அதன் தேவையையும் குழந்தைகளுக்கு சொல்லித் தருவதின் மூலம் குறைந்தபட்சம் வீடுகளில் வீண்விரயமாக செலவழிக்கப்படும் தண்ணீரைத் தடுக்க முடியும்.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் செலவழிக்கும் தண்ணீரின் அளவு சுமார் 150 லிட்டர். குடிப்பதற்கு 25 லிட்டர் தண்ணீர் கேன்களை விலைக்கு வாங்குகிறோம். 150 லிட்டர் தண்ணீரும் நாம் விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் என்னாவது என்று ஒரு நிமிடம் சிந்தித்தோமானால், தண்ணீரின் அவசியத்தையும், அதன் தேவையையும் உணர் ம். தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தமாக்கும் நவீன இயந்திரங்கள் பெருமளவில் விற்பனைக்கு வந்துவிட்டது. எல்லா மக்களும் வாங்கக்கூடிய விலையில் அதன் உற்பத்தியைப் பெருக்க அரசும் நடவடிக்கை எடுக்குமானால் தண்ணீரின் தேவையை ஓரளவிற்குக் குறைக்க முடியும்.

தாங்கள் வசிக்கும் தெருவில் உள்ள அனைவரும் தண்ணீரின் தேவையை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதைக் கலந்துரையாடி அவர்கள் வசிக்கும் தெருக்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாக அமல்படுத்தி, மழைக்கு ஆதாரமான மரங்களை ஒவ்வொரு தெருவிலும் வளர்ப்பதற்கு முயற்சி எடுப்போமானால், இருக்கும் இடம் சோலையாகவும், தங்குதடையின்றித் தண்ணீர் கிடைக்கும் சொர்க்கமாகவும் மாறும்.

Tags: News, Lifestyle, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top